தூக்கத்தை இழந்தால் இதயம் பாதிக்கும்: ஆய்வு எச்சரிக்கை

தூக்கத்தை இழந்தால் இதயம் பாதிக்கும்: ஆய்வு எச்சரிக்கை
Updated on
1 min read

நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் தூக்கமின்மையின் விளைவாக, இதயம் இயங்குவதில் பெரிய அளவில் பாதிப்பு நேரிடலாம் என்று புதிய மருத்துவ ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 24 மணி நேர சேவைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களால் பெரும்பாலும் அன்றாடம் குறைந்த நேரமே தூங்க முடிகிறது.

ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டானியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப் பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு இதய நோய் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

போதிய தூக்கம் இல்லாததால், இதய பாதிப்புடன் ரத்த அழுத்தமும் ஏற்படும் உண்டு என்கின்றது அந்த ஆய்வு முடிவு.

சரசாரியாக 31.6 வயது கொண்ட 19 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 24 மணி நேரப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பும், அந்தப் பணி முடிந்து மூன்று மணி நேரம் தூங்கிய பிறகும் இவர்களிடம் இருந்து ரத்த மாதிரி, சிறுநீர் மாதிரி மற்றும் ரத்த அழுத்த அளவீடு ஆகியவற்றைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது.

குறைந்த அளவே தூங்கிய இவர்களுக்கு ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு தொடர்பாக கியூட்டிங் கூறும்போது, "தினசரி நீண்ட நேரம் பணியாற்றுபவர்களின் குறைந்த அளவிலான தூக்கத்தையொட்டி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த முன்னோட்ட ஆய்வில், தூக்கம் குறைவு காரணமாக இதய பாதிப்புக்கான சாத்தியம் அதிகம் என்பது தெரியவந்தது. இதைப்போலவே அதிக நேரம் பணிபுரியக் கூடிய இதர தொழிலைச் சேர்ந்தவர்களிடமும் நீண்ட கால அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ஷிஃப்ட் அடிப்படையின் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் பாதிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வின் முடிவுகள் உறுதுணை புரிகிறது" என்றார் அவர்.

இந்த ஆய்வின் முடிவைப் பார்க்கும்போது, நீண்ட நேரம் பணிபுரிபவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்கள் போதுமான அளவில் தினமும் தூங்குவது அவசியம் என்பது அறிவுறுத்தப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in