ஒரு வாரத்தில் அலெப்போவிலிருந்து 25,000 பேர் வெளியேற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

ஒரு வாரத்தில் அலெப்போவிலிருந்து 25,000 பேர் வெளியேற்றம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
Updated on
1 min read

சிரியா, அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து ஒரு வாரத்தில் 25,000 பேர் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறிய தகவலில், "அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து திங்கட்கிழமை மட்டும் 15,000 பேர் வெளியேற்றப்பட்டனர். கடந்த ஒரு வாரத்திலிருந்து இதுவரை 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரம் பேர் அலெபோவின் கிழக்கு பகுதியில் உள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வசப்படுத்தியுள்ளன.

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்தம் கடந்த வெள்ளிகிழமை அமலுக்கு வந்தது. எனினும் சில இடங்களில் சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதால் போர் நிறுத்தம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அலெப்போவிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in