

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரி ஒன்று தறிகெட்டு புகுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். தஞ்சம் கேட்டு வந்தவரால் நடத்தப்பட்ட தீவிரவாத சம்பவம் இது என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற கைசர் வில்ஹெம் நினைவு சர்ச் அருகே மிகப் பெரிய சந்தை அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த சந்தை விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சந்தையை உற்சாகமாக கண்டுகளித்து பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வந்தனர். இந்தச் சூழலில், ஸ்டீல் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று தறிகெட்டு ஓடி சந்தைக்குள் புகுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டதாகவும், லாரிக்குள் சடலம் ஒன்று இருந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த லாரியை ஓட்டி வந்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், அவரை போலீஸார் கைது செய்திருப்பதாகவும் ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் நவெத் (23) என்பதும், பாகிஸ்தானில் இருந்து தஞ்சம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பேசிய ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், ‘‘இது ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம். தஞ்சம் கேட்டு வந்தவரால் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
பிரான்ஸில் கடந்த ஜூலை 14-ம் தேதி மிகப் பெரிய டிரக் லாரியுடன் பொதுமக்கள் கூட்டத்துக்குள் புகுந்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே பாணியில் இந்த சம்பவமும் நிகழ்ந்திருப்பதால் ஜெர்மனி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.