

கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 40 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2.7 லட்சம் கோடி) அளவுக்கு ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் உலகளவில் ஆயுத வர்த்தகத்தில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடி யாக ஆயுத விற்பனையில் பிரான்ஸ் கோலோச்சுகிறது. கடந்தாண்டில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகத்தை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது. கடந்தாண்டில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் ஆயுத சந்தை மதிப்பு முறையே, 4 பில்லியன் டாலர் மற்றும் 9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
ஆயுத விற்பனையில் மற்றொரு ஜாம்பவானாகத் திகழ்ந்த ரஷ்யா, 2014-ம் ஆண்டில் 11.2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் செய்திருந்தது. ஆனால், 2015-ல் ரஷ்யாவின் ஆயுத வர்த்தகம், 11.1 பில்லியன் டாலராக சரிந்துவிட்டது.
2014-ம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த சீனா, 2015-ல் 6 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு வர்த்தகத்தை அதிகரித்துள்ளது.
கொள்முதலில் கத்தார் முன்னிலை
ஆயுத கொள்முதலைப் பொறுத்தவரை, கடந்தாண்டில் அதிகபட்சமாக 17 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கத்தார் முன்னிலை வகிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 12 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆயுதங்களை வாங்க எகிப்தும், 8 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத கொள்முதலுக்கு சவுதி அரேபியாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தென் கொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட், இராக் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
இது தவிர, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த ஆயுத வர்த்தக அளவு, 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டில் குறைந்துள்ளது. 2014-ல் 89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த சர்வதேச மொத்த ஆயுத வர்த்தகம், 2015-ல் 80 பில்லியன் டாலராக குறைந்துள் ளது. அமெரிக்க நாடாளு மன்றத்தின் ஆய்வுப் பணிகள் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.