

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 4 முஸ்லிம் இளைஞர்கள் இராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஐயத்தை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் எழுப்பியுள்ளார்:
“ஆம்! 4 முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயிருப்பது உண்மைதான். அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-இல் இணைந்திருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்தத் தகவலை நாங்கள் மத்திய புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளோம்” என்றார் பாட்டீல்.
ஆரிஃப் ஃபயாஸ் மஜீத், அமன் நாயக் டாண்டெல், ஷாகித் ஃபரூக்கி, மற்றும் ஃபஹாத் தன்வீர் ஷேய்க் என்ற இந்த 4 இளைஞர்கள் காணாமல் போனதாக அவர்களது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக தானே மாவட்ட போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மே மாதம் 25, 26 மற்றும் 27ஆம் தேதிகளில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை கூடுதல் தலைமை ஆணையர் ஷரத் ஷேலர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் நன்றாகப் படித்தவர்கள் என்றும், இவர்கள் இராக்கிற்கு வேலை தேடிச் செல்லப்போவதாகவும் குடும்பத்தினரிடம் பேசியிருக்கின்றனர். பிறகு இவர்கள் எங்கு சென்றனர் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது.
காணாமல் போன ஷேய்க் மற்றும் டாண்டெல் பொறியியல் பட்டதாரிகள், டான்க்கி என்ற மற்றொரு நபர் கால் செண்டரில் பணியாற்றி வந்தவர்.
மே மாதம் 23ஆம் தேதி பாக்தாதிற்குச் சென்ற யாத்ரீகர்கள் பட்டியலில் இவர்கள் பெயர்கள் இருந்ததாக போலீஸ் மற்றும் மாநில உளவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மஜீத் என்ற நபர் தனது குடும்பத்திற்கு பாக்தாத்திலிருந்து இருமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். அதன் பிறகு மொசூலில் அவரது தொலைபேசி ’டெட்’ ஆனதாகக் கூறப்படுகிறது.
மஜீத் தன் குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில், நண்பர் ஒருவரை சந்திக்கவிருப்பதாகவும் அவருடன் இவர் பயணிப்பது பற்றி பெருமையாகக் கூறியதோடு, ‘பாவகரமான நாட்டில் வாழ விரும்பவில்லை’ என்று எழுதியிருப்பதாகவும் அவரது பெற்றோர் போலீஸில் தெரிவித்துள்ளனர்.