Published : 21 Dec 2022 06:16 AM
Last Updated : 21 Dec 2022 06:16 AM

மீண்டும் தீவிரமடையும் கரோனா பரவல் - சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக குறையும் என உலக வங்கி தகவல்

பெய்ஜிங்: நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி பாதியாகக் குறையும் என்று உலக வங்கித் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் உலக வங்கி சீனாவின் வளர்ச்சி தொடர்பான கணிப்பை வெளியிட்டது. அதில், நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதை 2.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2023-ல் சீனாவின் வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும்என்று முன்பு உலக வங்கி குறிப்பிட்டிருந்தது. தற்போது அதை 4.3 சதவீதமாகக் குறைத்துள்ளது.

சீனாவின் தீவிர ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் தேக்கம் ஆகியவை தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு மிக முக்கியமான காரணங்கள் என்று உலக வங்கிக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து உலக வங்கி மேலும் கூறுகையில், “சீனாவில் கரோனா ஊரடங்கால் தொழிற் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சீனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது. இந்நிலையில், அங்கு கரோனா பரவல் மீண்டும் வேகமடைந்துள்ளது. இதனால், பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்பை எதிர்கொள்ளும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை மிக முக்கியபங்கு வகிக்கிறது. ஆனால், ரியல்எஸ்டேட் துறை கடும் சரிவுக்குஉள்ளாகி இருக்கிறது. இளைஞர்களின் வேலையின்மையும் சீனாவின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

கரோனா மரணங்கள்: கரோனா பரவல் தீவிரம் குறைந்ததையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால், சீனா கரோனாபரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடித்து வந்தது. இதனால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரும் சரிவுக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில், கடந்த வாரம் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியது. இந்நிலையில், சீனாவில் கரோனா தொற்று மீண்டும் மிக வேகமாக பரவி வருவதாகவும், உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது.

கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில், சீனாவில் மயானங்கள் நிரம்பி வழிகின்றன.

சர்வதேச மருத்துவ நிபுணர்கள்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மயானம் ஒன்றில் தினமும்200 உடல்கள் தகனம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த மயானங்களில் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது பரவி வரும் கரோனா தொற்றால்சீனாவில் 10 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x