

சிரியாவில் போர்முனையில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்காக அரசுப் படைகளும் கிளர்ச்சிப் படைகளும் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அமல் செய்துள்ளன.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
அலெப்போ நகரை தலைமை யிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரின் மீது போரைத் தீவிரப்படுத்தியுள்ள அரசுப் படைகள் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை வசப்படுத்தியுள்ளன.
செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று அமலுக்கு வந்தது.
செஞ்சிலுவை சங்கம் சார்பில் 100 தன்னார்வ ஊழியர்களும் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பொதுமக்களை அங்கிருந்து வெளி யேற்றும் பணிகளில் ஈடுபட்டுள் ளன. போரில் காயமடைந்தவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.
எனினும் சில இடங்களில் சண்டை நிறுத்தத்தை மீறி இரு தரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதாக செஞ்சிலுவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மக்களை வெளியேற்றும் பணியில் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. கிழக்கு அலெப்போவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மருந்து வசதியின்றி பரிதவிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் குறித்து சிரியா அதிபர் ஆசாத் கூறிய தாவது: அலெப்போ நகர் முழுவதை யும் நாங்கள் கைப்பற்றவிடாமல் மேற்கத்திய நாடுகள் தடுத்து வருகின்றன. இதன்மூலம் தீவிர வாதிகளுக்கு அந்த நாடுகள் உதவி வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.
அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா வும் ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. அலெப்போ கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.