Published : 19 Dec 2022 08:36 PM
Last Updated : 19 Dec 2022 08:36 PM

Rewind 2022 | மனித உரிமை மீறல்களும், எழுச்சிப் போராட்டங்களும் - ஓர் உலகளாவிய பார்வை

வளர்ச்சியை நோக்கி மனித இனம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் நாகரிகத்தைப் பின்னோக்கி இழுக்கும் மனித உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. உலக அளவில் 2022-ஆம் ஆண்டில் நடந்த மனித உரிமை மீறல்களையும், மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும் ஒரு விரைவுப் பார்வையாக நோக்குவோம்.

உக்ரைன் - ரஷ்யா போர்: வருடத்தின் தொடக்க நிகழ்வாக அமைந்த உக்ரைன் - ரஷ்யா போர், வருடம் முழுவதும் தொடர்ந்தது. ஆம், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் படை எடுத்தது. தற்போது உக்ரைனின் பல பகுதிகள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் . ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலும் உள்ளான உக்ரைன் பெண்களின் கதைகளும் உலக அரங்கை அதிர வைத்தன. இத்துடன் எண்ணில் அடங்கா மனித உரிமை மீறல்களில் ரஷ்யா ஈடுபட்டது. இதன் விளைவாக உலக நாடுகளின் எதிர்வினைகளை ரஷ்யா நாளும் எதிர்கொண்டு வருகிறது.

சவுதியும் மரண தண்டனையும்: மரண தண்டனைகளை மனித குல நாகரிக வளர்ச்சிக்கு எதிரானவை என்று எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த 21-ஆம் நூறாண்டிலும் சவுதி, ஈரான், சீனா, வடகொரியா முதலான நாடுகள் தொடர்ந்து மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில் சவுதியால் 2022-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி 81 பேருக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குத் தண்டனை குறித்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அவர்கள் செய்தி அறிந்து கொண்டது பல்வேறு கேள்விகளை உலக அரங்கில் எழுப்பியன.

தலிபான்களும் பெண்களின் உரிமைகளும்: கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் தலைமையிலான ஆட்சி என்பது இன்னமும் ஆப்கன் பெண்களுக்கு இருண்ட காலமாகத்தான் இருந்து வருகிறது. தொடர்ந்து அங்கு பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளும், கனவுகளும் அழிக்கப்படுகின்றன. பெண்கள் கல்வி கற்கவும், பணிக்குச் செல்லவும் தலிபான்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருவது நாளும் செய்தியாகி வருகின்றது.

தொடரும் புலம்பெயர்பவர்களின் மரணம்: வறுமைக் கோட்டில் சிக்கியுள்ள மக்கள் பலருக்கு தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலான நாடுகளுக்கு சென்று விடுவதுதான் கனவாக இருந்து வருகின்றது. இதற்காக, தங்கள் உயிரை பணயம் வைத்து மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

அவ்வாறான பயணத்தில் நிகழும் மரணங்களும், அம்மக்களின் அபாயக் குரல்களும் 2022-ஆம் ஆண்டும் தொடர்ந்தன. ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குச் செல்ல முயன்ற 2,000-க்கும் அதிகமான ஆப்பிரிக்கர்கள் மீது மொராக்கோ - ஸ்பெயின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த கண்மூடித்தனமான, மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நம்முன் பெரும் கேள்வி முன்வைக்கப்பட்டது.

கத்தார் - எல்ஜிபிடி: 2022-ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில் நடத்தப்பட்டன. அப்போது போட்டியை காண வந்த புதுமைப் பாலினத்தவரை அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் நிறுத்தி, துஷ்பிரயோக வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம்: கடந்த மார்ச் 1-ஆம் தேதி, முகமது நபிகள் விண்ணேற்றத்தைக் குறிக்கும் நாளான்று, கிழக்கு ஜெருசலேமில் டமாஸ்கட் கேட் பகுதியில், மன்வர் புர்கான் (11) என்ற காது கேளாத சிறுமி தனது குடும்பத்தினருடன் கூடியிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், பாலஸ்தீனர்களை கலைக்க தீவிரமாக இறங்கினர். தண்ணீரைப் பீய்ச்சியும், ஸ்டன் கையெறி குண்டுகளையும் வீசியும் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

மேலும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலின் ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து செய்திகளாக உலகிற்கு கொண்டு வந்த அல்ஜசீரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே, இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹிஜாப்புக்கு எதிராக முழங்கிய ஈரான் பெண்கள்: ஈரானில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக அந்நாட்டு இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம்தான் இந்த ஆண்டு கவனித்தக்க போராட்டமாக மாறியது.

மாஷா அமினி என்ற இளம்பெண் கண்காணிப்பு காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது இறப்பு ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி ஏற்பட வழிவகுத்தது. ஈரானில் செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தக் கிளர்ச்சி மூன்று மாதங்களாகத் தொடர்ந்தது. இதில் 300-க்கு அதிகமானவர்கள் ஈரான் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 15,000-க்கும் அதிகாமானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டு பெண்களின் நலனுக்காக குரல் கொடுத்த ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீர் உள்ளிட்ட 20-க்கும் அதிகமானவர்களுக்கு ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது ஈரானை நோக்கி பல்வேறு கேள்விகள் எழக் காரணமாக அமைந்தது.

அமெரிக்க நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு : அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, அங்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் கிளம்பின. கருக்கலைப்புக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமெரிக்காவை 150 வருடங்கள் பின்னால் அழைத்துச் சென்றுவிட்டது என்ற விமர்சனக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது.

கடந்த 1973-ம் ஆண்டு ரோ vs வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின்படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பது உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், மிசிசிபி மாகாண அரசு 2018-ல் கருக்கலைப்புக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில் மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல மாகாணங்களில், குறிப்பாக குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அமெரிக்க பெண்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

எதிர்வினையை உருவாக்கிய சீனாவின் கட்டுப்பாடுகள்: கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா பெருந்தொற்றைத் தடுக்க சீன அரசு பொது முடக்கம், போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமல் செய்தது. இந்த நிலையில்தான் சீனாவின் ஜின்ஜியாங் மாகாண தலைநகரில் உரும்கி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கரோனா கட்டுப்பாடு விதிகள் அமலில் இருந்ததால், அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் தீயில் சிக்கியதாக கூறப்பட்டது.

இதையைடுத்து அரசுக்கு எதிராக உரும்கி நகரில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்தப் போராட்டம் சீனாவில் பல இடங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகளில் சீனா தளர்வை ஏற்படுத்தியது.

61 ஆண்டுகளுக்கு பிறகு... பாட்ரிஸின் பல்லை ஒப்படைத்த பெல்ஜியம்: பாட்ரிஸ் லுமும்பா... ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர். காங்கோ ஐரோப்பாவின் காலனியாக இருந்ததை பாட்ரிஸ் ஒருபோதும் விரும்பியதே இல்லை. காங்கோ விடுபட்டு சுதந்திரமாக, அதேநேரத்தில் ஐரோப்பாவுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்தச் சூழலில் 1960-ஆம் ஆண்டு காங்கோ குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் நாட்டின் பிரதமராக பாட்ரிஸ் லுமும்பா பதவியேற்றார். பெல்ஜியம் - காங்கோ உடன் ஏற்படுத்தப்பட்ட நட்பு உடன்படிக்கையையும் அவர் ரத்து செய்தார்.

பாட்ரிஸின் இந்த நடவடிக்கை பெல்ஜியத்தை கோபமடையச் செய்தது. இதனைத் தொடர்ந்துதான் வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றத்திற்கு பெல்ஜியம் தன்னை உடன்படுத்திக் கொண்டது. நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருந்தும் அரசின் சொத்துகளை பாட்ரிஸ் சட்டத்துக்கு புறமாக பயன்படுத்திக்கொண்டார் என்று போலியான குற்றம் சுமத்தப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பெல்ஜியம் இருந்தது. பாட்ரிஸ் கைது செய்யப்பட்டார்.

1961-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கோ பாதுகாப்புப் படையால் பாட்ரிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். பாட்ரிஸின் உடல் உறுப்பில் தங்கத்தினால் ஆன அவரது ஒரே ஒரு பல் மட்டுமே மிச்சம் இருந்தது. பாட்ரிஸின் இந்த மரணம் மனித இன வரலாற்றில் மிகக் கொடூரமான வன்முறையாக கருதப்பட்டது. இந்த நிலையில், 61 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்ரிஸின் பல்லை ராணுவ மரியாதையுடன் பெல்ஜியம் இந்த ஆண்டு ஜீன் மாதம் காங்கோவிடம் ஒப்படைத்தது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x