

ஜப்பானின் டட்யாமா வளைகுடா பகுதியில் அபூர்வமான இரு நண்பர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். ஹிரோயுகி அரகாவா என்ற கடல் சுற்றுலா வழிகாட்டியும் யோரிகோ என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மீனும் (Asian Sheepshead Wrasse) கடந்த 25 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறார்கள். ‘எங்கள் நட்புக்குக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை கடலுக்குள் சென்றதும் இரும்பு இயந்திரம் ஒன்றின் மீது சுத்தியலால் தட்டுவேன். சில நிமிடங்களில் எங்கிருந்தாலும் யோரிகோ வந்து சேர்ந்துவிடும். அதன் பிரம்மாண்டமான தலையை வருடிக் கொடுப்பேன். இருவரும் முத்தமிட்டுக்கொள்வோம். சிறிது நேரம் விளையாடுவோம். என்னையே சுற்றிச் சுற்றி வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். பிறகு விடைபெற்றுக்கொண்டு மேலே வந்துவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட நான் கூப்பிட்டு, யோரிகோ வராமல் இருந்ததில்லை. எங்கள் அபூர்வ நட்பை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டேன். தற்போது பலரும் எங்கள் நட்பை நேரில் பார்க்க வருகிறார்கள். என்னையும் யோரிகோவையும் வைத்து ஆவணப்படம் கூட எடுத்திருக்கிறார்கள். மீன்களுக்கு அன்பு போன்ற உணர்ச்சிகள் கிடையாது என்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யோரிகோ போல உற்ற தோழனை நான் மனிதரில் கூடக் கண்டதில்லை’ என்கிறார் ஹிரோயுகி அரகாவா.
சாத்தியமில்லாத இருவரின் கால்நூற்றாண்டு நட்பு!
ஜெர்மனியில் வசிக்கும் தாமஸ் ஜெரோமின் வீடு, வெளியில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் உள்ளே ஒரு காட்டையே அமைத்திருக்கிறார். 110 கிறிஸ்துமஸ் மரங்களையும் 16,000 பரிசுப் பொருட்களையும் வைத்து வீட்டை அலங்கரித்திருக்கிறார். 5 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரே ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை வைத்துதான், கிறிஸ்துமஸ் கொண்டாடியிருக்கிறார். அதற்குப் பிறகு 20, 45, 80 என்று மரங்களை அதிகரித்து, இந்த ஆண்டு 110 மரங்களை வைத்திருக்கிறார். கூடம், படுக்கையறை, சமையலறை, குளியலறை என்று எங்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. அக்டோபர் மாதம் மரம் தயாரிக்கும் வேலையில் இறங்கி, 8 வாரங்களில் நிறைவு செய்கிறார். இந்த ஆண்டு ஜெரோமின் கிறிஸ்துமஸ் மரங்கள் பற்றிச் செய்திகள் வெளிவந்து ஏராளமானவர்கள் அவர் வீட்டுக்கு வருகை தந்துகொண்டிருக்கிறார்கள். ‘கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அதிகம் செலவு ஆகாது. என்னால் சமாளிக்க முடியும் என்பதால்தான் இதுபோன்ற காரியங்களில் இறங்குகிறேன். இப்போதெல்லாம் எனக்காக நிறைய மரங்களைக் குறைந்த விலைக்குக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். கிறிஸ்துமஸ் முடிந்த 2 வாரங்களில் அனைத்துப் பொருட்களும் மிகவும் மலிவாகக் கிடைக்கும். அப்போது அடுத்த கிறிஸ்துமஸுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடுவேன். மூன்று வாரங்கள் அலங்கார விளக்குகளுக்கு மின்கட்டணம் 7 ஆயிரம் ரூபாய். இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்னப் பரிசுப் பொருளைக் கொடுத்து அனுப்பும்போது அவர்களின் மகிழ்ச் சிக்கு அளவே இருக்காது. கிறிஸ்துமஸ் முடிந்து 2 வாரங்களுக்கு எனக்கு வேலை அதிகம் இருக்கும். ஒவ்வொரு மரத்தையும் பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து விடுவேன்’ என்கிறார் தாமஸ் ஜெரோமின்.
110 மரங்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!