

இராக்கின் மொசுல் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் அதிக அளவில் ஆயுதங்களை தயாரித்து வருவது தெரியவந்துள்ளது.
இராக்கில் அரசுக்கு எதிராக ஐஎஸ் அமைப்பு தீவிர போரில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் இராக்கின் மொசுல் நகரை கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு அதனை தங்களது தலைநகராக பிரகடனம் செய்து கொண்டது.
இந்நிலையில், மொசுல் நகரை மீட்பதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் கடந்த அக்டோபர் மாதம் இறங்கியது. இதன்மூலம் அங்குள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் போர் நடைபெற்ற இடங்களிலும் இருந்து ஏராளமான ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளது. எனினும் இதுவரை 25 சதவீத பகுதியை மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த ஆயுதங்கள் ஆராய்ச்சிக் குழு (கான்ப்ளிக்ட் ஆர்மமென்ட்ஸ் ரிசர்ச்) இதுதொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் விவரம் வருமாறு:
மொசுல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐஎஸ் அமைப்பினர் தொழிற்சாலைகளை நிறுவி அதிக அளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவது தெரியவந்துள்ளது.
அவர்கள், ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை பக்கத்து நாடான துருக்கியில் இருந்து வாங்கி இருப்பதும் அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆராய்ச்சிக்குழுவின் செயல் இயக்குநர் ஜேம்ஸ் பிவன் கூறும்போது, “மொசுல் நகருக்குள் இராக் ராணுவம் முன்னேறிச் செல்லச் செல்ல, ஐஎஸ் தீவிரவாதிகள் பின்னோக்கிச் செல்கின்றனர். இதன் மூலம் அங்கிருந்த ஆயுத தொழிற்சாலைகளே ராணுவம் கைப்பற்றி உள்ளது. ஆனாலும், மிகச்சிறப்பாக பயிற்சி பெற்றுள்ள தீவிரவாதிகள், இழந்த தொழிற்சாலைகளை மீட்க முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கிறது” என எச்சரித்துள்ளார்.