Published : 12 Dec 2022 08:15 AM
Last Updated : 12 Dec 2022 08:15 AM
லண்டன்: பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் சாலையில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.
அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ‘கைலாசா’ என்ற தீவைவிலைக்கு வாங்கி அங்கு ஆசிரமம் நடத்தி வருவதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த அப்சர்வர் நாளிதழ் வெளி யிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பாப் பிளாக் மேன் மற்றும் பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கும் ரமிந்தர் சிங் ரேஞ்சர் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மேல் சபையில் இந்தாண்டு நடைபெற்ற தீபாவளி விருந்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க நித்யானந்தாவுக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று நித்யானந்தாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
விருந்துக்கு விளம்பரம்
இந்த விருந்துக்கு முன்பாகநித்யானந்தா அமைப்பு சார்பில்விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. அவை விருந்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாலியல் வழக்கில் சிக்கி இந்தியாவிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருக்கும் ஒரு வரை விருந்துக்கு அழைத்தது தொடர்பாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் தீபாவளி விருந்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றதாக ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இங்கிலாந்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். “இந்த செய்தி பொய்யான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆதாரமற்ற வகையில் நித்யானந்தா குறித்து இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரை குறிவைத்து பரப்பப்படும் இதுபோன்ற தகவல்கள் மத துவேஷத்தின் வெளிப்பாடாகவேபார்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT