

அலெப்போவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்கம் செய்வதாக சிரிய அரசுப் படை அறிவித்துள்ளது.
இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சிரிய அரசுப் படைகள் கூறியதாவது, கிளர்ச்சிப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நீக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
சிரியாவில் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரிய அரசுப் படைகள் கைப்பற்றிவிட்டன. மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்ற அலெப்போ நகரில் சிரிய அரசுப் படை முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலிருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இதனை அடுத்து செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமாக அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அலெப்போவின் கிழக்குப் பகுதியிலிருந்து 8,000 மக்கள் வெளியேறி உள்ளதாக லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்று சிரிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.