Published : 07 Dec 2022 07:37 AM
Last Updated : 07 Dec 2022 07:37 AM

இந்தியா 90 சதவீத மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது

புதுடெல்லி: குறுகிய காலத்தில் இந்தியா 90% மக்களுக்கு கரோன தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது என ‘பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ்’ அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ் அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள். குறுகிய காலத்தில் இந்தியா 90% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியது வியக்க வைக்கிறது. கரோனா பெருந்தொற்றை சமாளித்ததில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட மாபெரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

கோடிக்கணக்கான மக்களின் சுகாதாரத்தை குறிப்பாக தாய்- சேய் நலன்களை மேம்படுத்தியதில், நாடு வேகமான முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், டிஜிட்டல் சுகாதாரம் போன்றவற்றில் சிறப்பான பணிகள்செய்யப்பட்டுள்ளன. இதை உலகின் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் சுகாதாரத் துறை சீர்திருத்தங்களில் உள்ள ஆற்றல் மற்றும் வாய்ப்புகள் குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், மெலிண்டா கேட்ஸும் விவாதித்தனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி, உலகளாவிய பொது சுகாதாரத்துக்கான டிஜிட்டல் பொருட்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். சுகாதாரத் துறையில் இந்தியா கண்டுள்ள முன்னேற்றத் துக்கும், முயற்சிகளுக்கும் மெலிண்டா கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் சுகாதார முன்னுரிமை திட்டங்களுக்கும், தற்போதுள்ள நோய்களை ஒழிப்பதற்கும்உதவுவதாக பில்கேட்ஸ் அறக்கட்டளை உறுதியளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x