

துருக்கி ராணுவ வீரர்கள் இருவர் உயிருடன் எரிக்கப்பட்ட வீடியோவை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கான முயற்சியில் தனது நாட்டு ராணுவ வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது துருக்கி. இதனால் துருக்கி ராணுவத்துக்கு எதிரான நாச வேலைகளில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சிரியாவில் அல் பாப் பகுதியில், தங்களுடன் சண்டையிட்ட இரு துருக்கி ராணுவ வீரர்களை ஐஎஸ் அமைப்பு சிறை பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறை பிடித்த இரு துருக்கி ராணுவ வீரர்களையும் உயிருடன் எரிக்கும் காட்சியை வியாழக்கிழமை இரவு ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த மனிதாபிமானமற்ற செயல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து துருக்கி தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
துருக்கியில் இணைய சேவை முடக்கம்
துருக்கியில் இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவாமல் தடுக்க அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
இதனால் அங்கு யூ டியூப், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் பயனாளர்கள் திணறி வருகின்றனர்.
முன்னதாக சிரியாவில் கடந்த புதன்கிழமை ஐஎஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.