Published : 06 Dec 2022 01:53 PM
Last Updated : 06 Dec 2022 01:53 PM

ஆப்கனில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகள்: இந்தியா கவலை

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து இயங்குவது கவலை அளிக்கும் விஷயம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்ற முதல் மாநாடு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அஜித் தோவல், "ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை நம் அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று. ஆப்கன் விவகாரத்தில் நமக்கான முன்னுரிமைகள், முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து இந்தியாவுக்கு கவலை இருக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. நம் அனைவருக்குமானது. குழப்பம் நிறைந்ததாகவும், எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் உள்ள நிலையில் நமது இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான, பாதுகாப்பான, வளமான பகுதியாக மத்திய ஆசியா திகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் பின்னிப் பிணைந்து காணப்படுவது கவலை அளிக்கிறது. நிதி உதவிகள்தான் பயங்கரவாதத்தின் உயிர்நாடி. அந்த வகையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க வேண்டிய கடமை ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இருக்கிறது.

மத்திய ஆசிய நாடுகளுடனான தொடர்பு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்த பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், முதலீடுகளை மேற்கொள்ளவும், தொடர்புகளை வலுப்படுத்தவும் இந்தியா தயாராக இருக்கிறது. இது நிகழ்வதற்கு வெளிப்படையான, பங்கேற்புடன் கூடிய முன் முயற்சிகளும் ஆலோசனைகளும் அவசியம்" என்று அவர் கூறினார்.

மாநாட்டில் பேசிய கிர்கிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மாரட் இமான்குலோவ், "பயங்கரவாதத்தை ஒழிக்கவும், போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், ஆப்கானிஸ்தானிய பிரச்சினைக்குத் தீர்வு காணவும் வேண்டும் என்பது மத்திய ஆசிய நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை. இவ்விஷயத்தில் கிர்கிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கும்" என தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய தஜிகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நஸ்ருல்லா மமுத்ஜோடா, "உலகின் பல்வேறு பகுதிகளில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த பின்னணியில், நமது பிராந்தியத்தின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளன. புதிய சவால்களும் அச்சுறுத்தல்களும் எழுந்துள்ளன. சைபர் கிரைம், சைபர் பயங்கரவாதம், சுற்றுச்சூழல் போன்றவை புதிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன. மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் மத பயங்கரவாத சித்தாந்தம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், பாதுகாப்புக்கான முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. உள் மோதலுக்குத் தீர்வு காணாமல் சர்வதேச பாதுகாப்புக்குத் தீர்வு காண முடியாது.

ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் சிக்கலானதாகவே உள்ளது. மத்திய ஆசியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற தஜிகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது" என தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் விக்டர் மக்முதோவ், "அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை போதிய அளவு இல்லாததால் நமது பிராந்தியத்தில் வறுமை அதிகரித்து வருகிறது. ஆப்கனிஸ்தானில் அமைதி நிலவுவது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம். ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவையே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆப்கனிஸ்தான் தனிமைப்படுத்தப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அந்த நாடு அதன் பிரச்னைகளைப் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடக்கூடாது." என தெரிவித்தார். மாநாட்டில், துருக்மெனிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகளும் ஆப்கன் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கருத்துகளை முன்வைத்தார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x