Published : 04 Dec 2022 07:20 AM
Last Updated : 04 Dec 2022 07:20 AM
பாஸ்டன்: சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது.
காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக உழைக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் டேவிட் அட்டன்பரோ இணைந்து 2020-ம் ஆண்டு ‘எர்த்ஷாட்’ (Earthshot) என்ற பெயரில் பரிசை அறிமுகப்படுத்தினர். பரிசுக்கு தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் பவுண்ட் (ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படும். ‘இயற்கை பாதுகாப்பு’, ‘காற்று தூய்மை’, ‘கடல் புத்தாக்கம்’, ‘கழிவு இல்லாத உலகு’, ‘காலநிலை நடவடிக்கை’ ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு பரிசுக்கு, இந்தியா, கென்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
‘இயற்கை பாதுகாப்பு’ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கெய்தி நிறுவனத்துக்கு பரிசு கிடைத்துள்ளது.
கெய்தி தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ‘கிரீன் ஹவுஸ் இன் எ பாக்ஸ்’ என்ற தயாரிப்பை உருவாக்கி உள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் குறைந்த அளவு நீர் மற்றும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக கெய்தி நிறுவனத்துக்கு, இந்த ஆண்டுக்கான எர்த்ஷாட் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இளவரசர் வில்லியம் பரிசு வழங்கி கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT