

"மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும."
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் பகுதியில் மலேசிய விமான சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: "ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்களுடன் பேசியதாக வெளியாகியுள்ள தகவல் சித்தரிக்கப்பட்டவை. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த உரையாடலை இடைமறித்து பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதை ஆய்வு செய்தபோது, அந்த உரையாடல் விமான விபத்து நடைபெறுவதற்கு முந்தைய நாளே பதிவு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
அரசியல் ராஜதந்திரத்தில், போலி ஆதாரங்களை விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ள முடியாது. பழி சுமத்துவதற்கு முன்னர் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.
மேலும், மலேசிய விமானம் எஸ்.ஏ-17 பக் ரக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறியிருக்கிறது. சம்பவம் நடந்த 10 நிமிடங்களில் எப்படி ஒரு குற்றச்சாட்டை உக்ரைன் அரசால் முன்வைக்க முடிந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதவிர, சர்ச்சைக்குரிய வான்வெளியில் விமானங்கள் பறக்க உக்ரைன் அரசு ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.