

பலத்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பிலிப்பின்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரம்மசூன் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் செவ்வாய்க்கிழமை மாலை பிலிப்பின்ஸின் கிழக்கில் உள்ள பிகோல் பகுதியை தாக்கும் எனவும் தலைநகர் மணிலா மற்றும் அதிக மக்கள் வசிக்கும் பிற பகுதிகளை புதன்கிழமை அதிகாலை தாக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை 6 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும் 39 ஆயிரம் பேரை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. புயல் தாக்கும் முன்பாக இப்பணியை முடித்து விடுவோம்” என்றனர்.
ஆண்டுக்கு சுமார் 20 புயல்கள் பிலிப்பின்ஸை தாக்குகின்றன. இவற்றில் பல புயல்கள் கடும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் பிலிப்பின்ஸை தாக்கிய ஹயான் புயலுக்கு அங்கு 7,300 பேர் இறந்தனர்.இந்நிலையில் இந்த ஆண்டு மழைக்காலத்தின் முதல் கடும் புயல் எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.