ரஷ்யாவில் மது போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 33 பேர் பலி

ரஷ்யாவில் மது போதைக்காக குளியல் எண்ணெய் குடித்த 33 பேர் பலி
Updated on
1 min read

ரஷ்யாவில் மது போதைக்காக ரசாயன குளியல் எண்ணெயை குடித்த 33 பேர் உயிரிழந்தனர். 54 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 4,000 கி.மீ. தொலைவில் இர்கட்ஸ்க் நகரம் அமைந்துள்ளது.

அந்த நகரின் பின்தங்கிய பகுதி மக்கள், மது போதைக்காக குறிப்பிட்ட வகை மலிவு விலை ரசாயன குளியல் எண்ணெயை குடிப்பதை வழக்கமாகக் கொண் டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்ட குளியல் எண்ணெயை அப்பகுதி மக்கள் வழக்கம்போல வாங்கிக் குடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் 33 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்களும் அடங்குவர்.

மேலும் 54 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கோமா நிலையில் உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

இர்கட்ஸ்க் நகரில் சுமார் 100-க் கும் மேற்பட்ட கடைகளில் குறிப் பிட்ட வகை குளியல் எண்ணெய் விற்கப்படுகிறது. அதை குடிக்கக்கூடாது என்று பாட்டிலின் மேற்பகுதியில் எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. அதையும் மீறி மது போதைக்காக ஏழை, எளிய மக்கள் குளியல் எண்ணெயை வாங்கிக் குடிக்கின்றனர்.

தற்போதைய உயிரிழப்பு நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் குடித்த குளியல் எண்ணெயில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் கலந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். எனவே அவற்றை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in