

இந்தோனேசியாவில் ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், 13 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் உள்ள திமிகா நகரில் இருந்து, ராணுவத்துக்குச் சொந்தமான ஹெர்குலிஸ் சி-130 விமானம், நேற்று காலை 5.35 மணிக்கு புறப்பட்டது. வாமினாவில் காலை 6.13 மணிக்கு இவ்விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
லிசுவா மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, 6.08 மணிக்கு திடீரென விமானம் மாயமானது. அடுத்த ஒரு நிமிடத்தில், கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடலில், லிசுவா மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் பயணித்த 3 பைலட்டுகள், 9 பணியாளர்கள் மற்றும் ஒரு ராணுவ அதிகாரி என, 13 பேரும் இவ்விபத்தில் பலியானதாக, விமானப் படை தலைவர் அகஸ் சுப்ரியத்னா தெரிவித்தார்.
விமானம் நொறுங்கிக் கிடந்த இடத்தில் இருந்து பலியான 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த 2015-ம் ஆண்டில் இதே போன்ற ஹெர்குலிஸ் சி-130 விமானம் விபத்துக்குள்ளாகி 142 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.