

அமெரிக்க ஜனாதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சொந்த அறக்கட்டளையை கலைத்து விடப் போவதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் அடுத்த மாதம் முறைப்படி பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில் கைட்ஸ்டார் என்ற இணையதளம் டொனால்டு ஜே ட்ரம்ப் என்ற பெயரில் ட்ரம்ப் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், இந்நிறுவனம் கடந்த 2015 மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுப்பியது.
அறக்கட்டளைக்கு சொந்தமான பணம், சொத்துகள் ஆகியவற்றை ட்ரம்ப் தனது குடும்பத்தினர் மற்றும் பிற நிறுவனங்களின் லாபத்துக்காக பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியிருந்தது.
மேலும் தேர்தல் பிரச்சாரத்துக்கு அறக்கட்டளை பணத்தை ட்ரம்ப் பயன்படுத்தியதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரத்தை நியூயார்க் நகர அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மென் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளையை கலைத்துவிடப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது:
அறக்கட்டளையை கலைத்து விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி எனது வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளேன். எனது அறக் கட்டளை சார்பில் எண்ணற்ற நலப் பணிகளை செய்து முடித்துள்ளேன். இதன்மூலம் முன்னாள் ராணுவ வீரர்கள், சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், அவர்களது குழந்தைகள் ஆகியோர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.