

பல்வேறு துறைகளில் ஐ.நா. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என, ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியுள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. ஐ.நா. சபையின் 9-வது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவிப் பிரமாணமும் செய்துகொண்ட, அந்தோனியோ குத்தேரஸ்(67) ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் அந்தோனியோ குத்தேரஸை வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசி னார். இந்த சந்திப்பு குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,
‘பல்வேறு துறைகளில் ஐ.நா. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளில் இந்தியா ஆர்வமுடன் வழங்கி வரும் பங்களிப்பை குத்தேரஸ் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.
நீடித்த வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு கவனம் செலுத்தப்போவதாக புதிய பொதுச் செயலாளர் அறிவித்துள்ள நிலையில், இந்தியா தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என, ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்’ என்றார்.
ஐ.நா.வின் துணை நிலை பொதுச் செயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மென் மற்றும் ஐ.நா.வின் அரசியல் விவகாரங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகளையும் ஜெய் சங்கர் சந்தித்து, பொது நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவும் செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்.