

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர்.
இதுகுறித்து லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில், "சிரியாவின் கிழக்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலுள்ள ஹோஜ்னா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பலியாகினர். இதில் சிறுவர், சிறுமியரும் அடங்குவர். இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்ற உறுதியான தகவல் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட கிராமம் சிரியாவில் அதிக எண்ணெய் வளமிக்க பகுதியாகும். இந்தப் பகுதி ஐஎஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு அமெரிக்க ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
எனவே, இந்தத் தாக்குதலையும் அமெரிக்க ராணுவம் நிகழ்த்தியிருக்கலாம் என சிரிய மனித உரிமை ஆணையம் சந்தேகம் தெரிவித்துள்ளது.