

சவூதி அரேபியா வாழ் இந்திய வம்சாவளி சிறுமி கேகாஷன் பாசு (16) குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதை வென்றுள்ளார். இவர் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக இருக்கிறார்.
கேகாஷன் பாசுவின் பெற்றோர்கள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள். கேகாஷன் கடந்த சில வருடங்களாக சவுதி அரேபியா உட்பட பல நாடுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கேகாசன் பாசுவின் இந்தச் செயலை பாராட்டும் வகையில் அவருக்கு குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருது நெதர்லாந்தில் உள்ள ஹெகு நகரத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
வறுமைக்கு எதிராக பிரச்சாரம் செய்து, 2006-ம் ஆண்டு அமைதிக்கான பரிசை வென்ற முகமது யூனிஸ், கேகாஷன் பாசுவுக்கு அவ்விருதை வழங்கி சிறப்பித்தார்.
விருதைப் பெற்று கொண்ட பின் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கேகாஷன் பேசும்போது,"ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக எது நேர்தாலும் உங்களது நம்பிக்கையை இழக்காதீர்கள். டொனால்டு ட்ரம்ப் போன்ற தலைவர்களால் தடங்கல் இருந்தாலும் தொடர்ந்து பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக செயல்படுங்கள்" என்று பேசினார்.
சுற்றுச்சூழல் தொடர்பான இந்த ஆர்வத்துக்கு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனது பாட்டி வீட்டின் மாடி தோட்டத்தைக் குறிப்பிட்டார் கேகாஷன்.
முன்னதாக மலாலா
இந்த பரிசு ஆண்டுத்தோறும் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடுபவர்களாக வழங்கப்படுவதாக குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
இதற்கு முன்னதாக இந்த விருதை பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மலாலா பெற்றிருக்கிறார்.
பல நாடுகளில் சுற்றுச்சூழல் திட்டங்கள்
கேகாஷன் பாசு தன்னுடைய 12 வயதில் ’கீரின் ஹோப்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர்.
இந்தத் தொண்டு நிறுவனத்தின் மூலம் மெக்சிகோ, கொலம்பியா, பிரான்ஸ், ஒமன், நேபால் ஆகிய நாடுகளில் 5000 மரங்கள் நடப்பட்டுள்ளன.
இத்துடன் கடலோரத்தில் இருக்கும் வனப் பகுதிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார் கேகங்ஷன் பாசு.