Published : 28 Nov 2022 10:02 AM
Last Updated : 28 Nov 2022 10:02 AM

சீன கரோனா கலவரம் | செய்தியாளர் மீது தாக்குதல்; மன்னிப்பு கோரும் செய்தி நிறுவனம்

ஷாங்காய்: சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பற்றி களத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்காக சீன அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த செய்தி நிறுவனம் கோரியுள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் செய்தியாளரை சில காவலர்கள் சுற்றி வளைத்து அவர் கைகளுக்கு விலங்கிட்டு தாக்குகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் பிபிசி செய்தியாளர் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என பிபிசி அடையாளப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிபிசியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "எட் லாரன்ஸ் என்ற எங்களது பத்திரிகையாளர் சீனாவின் ஷாங்காய் நகரில் செய்தி சேகரித்தபோது மோசமாக நடத்தப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். அவரை கைவிலங்கிட்டு கைது செய்துள்ளனர். அவரை சிறிது நேரத்தில் விடுவித்துள்ளனர். இருப்பினும் நடந்த சம்பவத்திற்கு அவர்கள் எவ்வித விளக்கமோ அல்லது மன்னிப்போ தெரிவிக்கவில்லை. சீன தரப்பு முறையான விளக்கம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஜீரோ கோவிட் இலக்கால் மக்கள் வெகுவாக அதிருப்தியடைந்துள்ளனர். தற்போது பரவும் கரோனா தொற்று அறிகுறிகள் அற்றதாகவும் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாததாகவும் இருந்தாலும் கூட அரசு தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் கெடுபிடிகளை விதிப்பதாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் மிகவும் அரிது. கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 100 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் மக்கள் தற்போது பொறுமை இழந்து, தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

ஜின்ஜியாங், ஷாங்காயில் போராட்டம்: ஜின்ஜியாங் மாகாண தலைநகர் உரும்கி நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் கரோனா கட்டுப்பாடு விதிகள் அமலில் இருந்ததால், அங்கிருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதையைடுத்து உரும்கி நகரில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த போராட்டம் சீனாவின் பல இடங்களுக்கு பரவுகிறது. ஷாங்காய் நகரில் நேற்று முன்தினம் இரவு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்த கூட்டம் நேற்று காலையில் போராட்டமாக மாறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x