Published : 30 Jul 2014 10:27 AM
Last Updated : 30 Jul 2014 10:27 AM

மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: மணப்பாக்கத்தில் இருந்து முகப்பேருக்கு 8 நிமிடத்தில் சென்ற இதயம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மணப்பாக்கத்தில் இருந்து முகப் பேருக்கு 8 நிமிடங்களில் அவரது இதயம் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்தவர் எல்.ஷீபா (22). சோழிங்க நல்லூரில் உள்ள ஷிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 27ம் தேதி மாலை 5.30 மணிக்கு அவர் அசோக் பில்லரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஷீபா கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஷீபாவை, அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூளைச்சாவு

இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக ராமாபுரம் மணப்பாக்கம் மியாட் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் திங்கள்கிழமை மாலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து ஷீபாவின் உடல் உறுப் புகளை தானம் செய்ய, அவரு டைய உறவினர்கள் முன்வந்தனர்.

இந்த தகவல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் தமிழ்நாடு மூளைச் சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்கப் பட்டது. உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்திருப்போரின் பட்டியலை பார்த்தனர். அந்த பட்டியலில் முகப்பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இதயத்திற்காக பதிவு செய்து இருந்தார். இதையடுத்து மூளைச் சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை, அவருக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். மற்ற உறுப்புகளையும் சீனியாரிட்டி முறையில், நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது.

பாதுகாப்புக்கு 100 போலீஸார்

இதையடுத்து ஷீபாவின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் ஆகிய வற்றை அறுவைச் சிகிச்சை மூலமாக டாக்டர்கள் எடுத்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் அவரது இதயத்தை பாது காப்பாக ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு டாக்டர்கள் ஆம்பு லன்ஸில் புறப்பட தயாராக இருந்தனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்படி, போலீஸ் அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். ராமாபுரம் மணப்பாக்கம் மியாட் மருத்துவ மனையில் இருந்து முகப்பேர் மருத்துவமனை வரை வழிநெடு கிலும் 100-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். அவர்கள் சாலையில் ஆம்புலன்ஸ் செல்லும் போது, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

8 நிமிட பயணம்

இதைத் தொடர்ந்து நள்ளிரவு சரியாக 12.48 மணிக்கு மியாட் மருத்துவமனையில் நின்ற ஆம்புலன்ஸில் இதயத்துடன் டாக்டர்கள் ஏறினர். 12.50 மணிக்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அங்கிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் முகப்பேர் மருத்துவமனையை 8 நிமிடங் களில் ஆம்புலன்ஸ் சென்றடைந் தது. தயாராக இருந்த டாக்டர்கள் குழுவினர் ஷீபாவின் இதயத்தை, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிக்கரமாக பொருத்தினர்.

மற்ற உறுப்புகள்

மூளைச்சாவு அடைந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப் பட்ட ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல், மியாட் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டது. மற்றொரு சிறுநீரகம், அர மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டது. இரண்டு கண்கள், சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது. இந்த பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால், 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x