22 ஆண்டு ஆட்சி செய்த காம்பியா அதிபர் தேர்தலில் தோல்வி

22 ஆண்டு ஆட்சி செய்த காம்பியா அதிபர் தேர்தலில் தோல்வி
Updated on
1 min read

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தொடர்ந்து 22 ஆண்டுகள் ஆட்சி செய்த யாக்யா ஜமேக்(Yahya Jammeh) தோல்வியைத் தழுவினார்.

51 வயதான யாக்யா ஜமேக்கின் ஆட்சியின் மீது கடந்த சில வருடங்களாக மக்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வந்தனர். அவருடைய ஆட்சியைக் குறித்து 'சர்வாதிகார ஆட்சி' என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் காம்பியாவில் வியாழக்கிழமை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வெளியிடப்பட்ட முடிவுகளில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் யாக்யா ஜமேக் தோல்வி அடைந்துள்ளார்.

தோல்வி குறித்து ஜமேக் கூறும்போது, "புதிய அதிபருக்கு என்னுடைய வாழ்த்துகள். மிகவும் வெளிப்படையாக நடத்தப்பட்ட தேர்தல் இது. காம்பியா மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாவின் முடிவை நான் கேள்வி கேட்பதில்லை" என்று கூறினார்.

முன்னர் ஒருமுறை, கடவுள் விருப்பப்பட்டால் தன்னால் ஒரு பில்லியன் ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியும் என்று ஜமேக் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

1994 ஆம் ஆண்டில் ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் அதிபரான யாக்யா செய்தியாளர்கள், எதிர்க்கட்சிகளை நடத்திய விதம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in