தனி நாடு கோரிக்கையை கைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒப்புதல்

தனி நாடு கோரிக்கையை கைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒப்புதல்
Updated on
1 min read

இலங்கை ஒன்றுபட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம், பிரிவினைக்கு ஆதரவான நிலையை கைவிடுகிறோம் என்று இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கள தேசிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்கள் மீதான விசாரணை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை ஒற்றையாட்சி முறை கொண்ட நாடு என்பதை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ) ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்களில் புதன்கிழமை செய்தி வெளியாகியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலங்கையில் இருந்து பிரித்து தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என்பதே டி.என்.ஏ.வின் அரசியல் நோக்கம் என்று சிங்கள அமைப்புகள் கூறியிருந்தன. கடந்த ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில், டி.என்.ஏ.வின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு தனி நாடு குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருந்ததாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் டி.என்.ஏ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இலங்கை ஒற்றையாட்சி முறை கொண்ட நாடு; இதில் தனி நாடு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை” என்றனர். இந்த வழக்கு வரும் செப்டம்பர் மாத மத்தியில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

மிதவாத தமிழ் கட்சிகளைக் கொண்டு 2004 தொடக்கத்தில் டி.என்.ஏ அமைக்கப்பட்டது. என்றாலும் இது விடுதலைப்புலிகளின் ஒரு தொலைநோக்கு திட்டமாகவே கருதப்படுகிறது. தமிழர்களுக்கு தனி தாயகம் கோரிக்கையை டி.என்.ஏ. வெளிப்படையாக ஆதரிக்காவிட்டாலும் இக்கட்சி விடுதலைப்புலிகளின் மாற்று அமைப்பாகவே கருதப்படுகிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பகுதிகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் கொண்ட ஒரு ஏற்பாட்டினையே இக்கட்சி வெளிப்படையாக பேசி வருகிறது. இலங்கையின் ஒன்றுபட்ட தன்மையை டி.என்.ஏ எதிர்ப்பதாக சிங்கள அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in