அல்ஜீரியாவை அசைத்த இஸ்மாயில் படுகொலை: 49 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

இஸ்மாயில் | கோப்புப் படம்
இஸ்மாயில் | கோப்புப் படம்
Updated on
1 min read

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அல்ஜீரியாவை சேர்ந்தவர் பென் இஸ்மாயில் (38). ஓவியர், இசை கலைஞர், சமூக வேகவர் என இஸ்மாயிலுக்கு பல முகங்கள் உண்டு. அல்ஜீரியாவின் மிலியானா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கடந்த ஆண்டு டிசி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அவர் இடம்பெயர்ந்தபோது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ நிகழ்வு அல்ஜீரியாவை திருப்பிப் போட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்கவும், அதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கும் இஸ்மாயில் தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அந்த பொய்ச் செய்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவியது.

காட்டுத் தீ ஏற்படுவதற்கு இஸ்மாயில்தான் காரணம் என உள்ளூர்வாசிகள் நம்பத் தொடங்கினர். இறுதியாக, காட்டுத் தீயை இஸ்மாயில்தான் ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவர் மீது இரக்கமின்றி தாக்குதல் நடத்தி, அவரை தீ வைத்துக் கொன்றனர். இந்தக் கொலை அல்ஜீரியாவை உலுக்கியது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலரும் பலியாகினர். இந்த கொலை தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓவியம் தீட்டும் இஸ்மாயில்
ஓவியம் தீட்டும் இஸ்மாயில்

இந்த நிலையில், இக்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்தும், 28 பேருக்கு இரண்டு ஆண்டுகள் (பரோல் இல்லாமல்) சிறைத் தண்டனை விதித்தும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவை பொறுத்தவரை அங்கு 1993-ஆம் ஆண்டு முதல் மரணத் தண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இஸ்மாயிலுக்கு நிகழ்ந்த கொடூரத்துக்காக, அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் மரண தண்டனையை இப்போது வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in