

சிரியாவின் அலெப்போ நகரில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை அந்த நாட்டு அரசுப் படை கைப்பற்றியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் கிளர்ச்சிப் படைகளும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு அளிக்கும் ரஷ்யா சிரியாவில் நேரடியாக போரில் ஈடுபட்டு வருகிறது. சில கிளர்ச்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.
சிரியாவின் மிகப்பெரிய நகரில் ஒன்றான அலெப்போவை தலைமையிடமாகக் கொண்டு கிளர்ச்சிப் படைகள் செயல்பட்டு வந்தன. அந்த நகரை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் தாக்குதல் நடத்தின. அலிப்போவை கைப்பற்ற கடந்த 2012 முதல் போர் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரில் ஈடுபட்டிருப்பதால் அவரது கை ஓங்கிவருகிறது. அந்த நகரின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என்று அதிபர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
அங்கு நடைபெறும் போரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாகி உள்ளனர்.