இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 268 ஆக உயர்வு - சியாஞ்சூர் பகுதியில் 151 பேரை காணவில்லை

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்பு குழுவினர் தூக்கி வருகின்றனர். (அடுத்த படம்) சியாஞ்சூர் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமத்தை இந்தோனேசிய அதிபர்  ஜோகோ விடோடோ நேற்று பார்வையிட்டார்.       படங்கள்: பிடிஐ
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் பகுதியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்பு குழுவினர் தூக்கி வருகின்றனர். (அடுத்த படம்) சியாஞ்சூர் பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமத்தை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நேற்று பார்வையிட்டார். படங்கள்: பிடிஐ
Updated on
2 min read

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 151 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புபணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த 21-ம் தேதி மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு சுமார் 2 மணி நேரத்துக்கு லேசான அதிர்வுகள் 25 முறை ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த சியாஞ்சூர் பகுதியில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பள்ளிக் கட்டிடங்களைவிட்டு வெளியேறிய குழந்தைகள், வீட்டில் உள்ள பெற்றோரை நினைத்து அழுதனர். அவர்களை சமாதானப்படுத்திய ஆசிரியர்கள், அருகே உள்ள வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பீதியில் உறைந்திருந்த குழந்தைகள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி நின்றிருந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என மேற்கு ஜாவா ஆளுநர் ரித்வன் கமில் தெரிவித்துள்ளார்.

சியாஞ்சூர் பகுதியில் 151 பேரை காணவில்லை. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சியாஞ்சூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து, இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மீட்பு பணிக்கான இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவை 21-ம் தேதி இரவே சியாஞ்சூர் பகுதிக்கு அனுப்பப்பட்டன. சாலைகள், பாலங்கள்இடிந்து போனதாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், மீட்பு குழுவினர் அங்கு செல்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. நேற்று இங்கு நிலைமை சீரடைந்ததும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

சியாஞ்சூர் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ நேற்று பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இங்கு கடந்த2004 டிசம்பரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 புள்ளிகளாக பதிவானது. இதனால் 14 நாடுகளில் சுனாமி தாக்கியது. இதில் 2.26 லட்சம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: இந்தோனேசியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்தோனேசியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பும், பொருட்சேதமும் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சோகமான நேரத்தில், இந்தோனேசிய மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in