சீனாவுடன் ட்விட்டர் மோதல் தொடுத்த டொனால்டு ட்ரம்ப்

சீனாவுடன் ட்விட்டர் மோதல் தொடுத்த டொனால்டு ட்ரம்ப்

Published on

சீனாவை ‘கள்ளத்திறமையுடன் பணம் கையாளும் நாடு’ என்றும் தென்சீனக் கடல் பகுதியில் ராணுவ விரிவாக்கம் செய்யும் நாடு என்றும் டொனால்டு ட்ரம்ப் தன் ட்விட்டரில் சாடியுள்ளார்.

தைவான் அதிபரின் தொலைபேசியை ட்ரம்ப் அங்கீகரித்து பேசியது சீனாவை வெறுப்பேற்றியுள்ளது. இதனையடுத்து உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கிடையே வர்த்தகப் போர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது சீனாவை ட்ரம்ப் தொடர்ந்து தாக்கிப் பேசி வந்தார். அடுத்த மாதன் அதிபர் பதவியேற்கும் ட்ரம்ப், சீனாவுடன் தனது ஆக்ரோஷமான போக்கை கடைபிடிப்பார் என்றே தெரிகிறது.

“அமெரிக்க நிறுவனங்களை வர்த்தகப் போட்டியிலிருந்து விலக்க தங்கள் நாட்டு பணமதிப்பை குறைக்க நம்மிடம் சீனா கேட்டதா? நம் நாட்டிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பொருட்களுக்கு கடுமையாக வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு வரிவிதிப்பதில்லை. தெற்கு சீனக் கடல் பகுதியில் பெரிய ராணுவ அமைப்பை உருவாக்கி வருவது குறித்தெல்லாம் ‘சரியா’ என்று நம்மிடம் கேட்டனரா? இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார் ட்ரம்ப்.

இந்நிலையில் பதவியேற்றவுடன் முதல் காரியமாக சீனாவை ‘கள்ளத்திறமையுடன் பணமதிப்பை கையாள்பவர்கள்” என்று அறிவிக்கப்போவதாக தெரிகிறது.

அமெரிக்க அரசு பற்றாக சீனாவுக்கு ஒரு ட்ரில்லியன் டாலர்கள் வைத்திருப்பதால் பேச்சு வார்த்தையில் அமெரிக்காவுக்கு கொஞ்சம் சாதகம் இருப்பதாக தெரிகிறது, ஆனால் வெளிப்படையாக சீனாவின் பணக்கொள்கை பற்றி அறிவிப்பது நிச்சயம் ஒரு வர்த்தகப்போரை ஏற்படுத்தும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

தைவான் அதிபர் அழைப்பை ஏற்றது குறித்து சீனா கூறும்போது, ட்ரம்ப்பின் அனுபவமின்மையைக் காட்டுகிறது என்று கூறியுள்ளது, ஆனால் அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ், இது ஒரு மரியாதை நிமித்தமான அழைப்பே என்று கூறியுள்ளார். மேலும் புதிய சீனக் கொள்கை உருவாக்கப்படும் என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in