இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவரின் உடலை தாங்கி நிற்கும் ஒருவர்.
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவரின் உடலை தாங்கி நிற்கும் ஒருவர்.

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

Published on

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு ஜாவா தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக காணப்பட்டது. நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சியாஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்ததில் பலரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த நில நடுக்கத்துக்கு இதுவரை 252 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 7,060 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் இன்னமும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஜாவாவை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in