Published : 22 Nov 2022 06:42 AM
Last Updated : 22 Nov 2022 06:42 AM

சித்ரவதையால் மியான்மர் பணிப்பெண் உயிரிழப்பு - சிங்கப்பூரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி மூதாட்டி

சிங்கப்பூர்: மியான்மரைச் சேர்ந்த பியாங் கை டான் என்ற 24 வயது இளம் பெண், சிங்கப்பூரின் பீஷான் பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தில் கடந்த 2015, மே மாதத்தில் வீட்டு பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். இப்பெண் 14 மாதங்களுக்குப் பிறகு தலையில் பலத்த காயம் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பான விசாரணை யில் இப்பெண் அந்தக் குடும்பத் தினரால் சித்ரவதைக்கு ஆளானது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்தது. அடித்தும் உதைத்தும் பட்டினி போட்டும் அப்பெண்ணை அவர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வேலைக்கு சேர்ந்தபோது 39 கிலோ எடையுடன் இருந்த பணிப்பெண், இறக்கும்போது வெறும் 24 கிலோ மட்டுமே இருந்தார்.

30 ஆண்டுகள் சிறை தண்டனை: இந்த வழக்கில் காயத்ரி முருகையன், போலீஸ் அதிகாரியான அவரது கணவர் கெவின் செல்வம், தாயார் பிரேமா நாராயணசாமி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 41 வயதான காயத்ரிக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் 64 வயதான மூதாட்டி பிரேமா தன் மீதான 48குற்றச்சாட்டுகளை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இவர் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் சுமார் ரூ.30,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பணிப்பெண் சித்ரவதை காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்ட கெவின் செல்வம் (43), கடந்தாண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x