

இந்தியாவில் நடைபெறும் 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் கூறியுள்ளார்.
'ஆசியாவின் இதயம்' மாநாடு இந்தியாவில் டிசம்பர் மூன்றாம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெறவுள்ளது.
உரி தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் மூத்த பாகிஸ்தான் அதிகாரி சர்தாஜ் அசிஸ் ஆவர்.
'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக சர்தாஜ் கூறும்போது, "பாகிஸ்தான் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்து சீர்குலைத்தது போல் பாகிஸ்தான் நடந்து கொள்ளாது.
இந்தியாவில் நடைபெறவுள்ள 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும். இந்த மாநாடு இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் கொத்தளிப்பை தணிப்பதற்கான ஒரு வாய்ப்பு" என்று கூறினார்.
மேலும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் குறித்த கேள்விக்கு பதிலளித்த அசிஸ் பேசும்போது, "இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் காஷ்மீர் பிரச்சினைக்கு டொனால்டு ட்ரம்ப் உதவினால் அவர் நோபல் பரிசு பெற தகுதியானவர்" என்று பேசினார்.
முன்னதாக காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று இந்தியா அறிவித்தது. அதன் பின் வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. இதனால் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.