

பெஷாவர்: பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடுதல் போலீஸார் சென்ற வாகனம் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், “ஹங்கு மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான காவல்துறை நடவடிக்கையில் 9 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்” என்றார்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கைபர் பக்துன்கவா முதல்வர் சுகைல் அப்ரிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதிகளின் வன்முறை, ஆப்கானிஸ்தான் போராளிகளின் ஊடுருவல் மற்றும் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கை காரணமாக கைபர் பக்துன்கவா மாகாணம் பல ஆண்டுகளாக அமைதியை இழந்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இம்மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதாக தடை செய்யப்பட்ட ‘தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பு மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது.
சிறுமி சுட்டுக் கொலை
இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு சிறுமியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். பிறகு அந்த சிறுமியின் உடலை ஒரு ராணுவ வாகனத்தில் முன்புறம் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. போராட்டம் நடத்தும் மக்களை அச்சுறுத்தும் விதமாக இந்த அட்டூழியத்தை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதாக கூறப்படுகிறது.