உலக மசாலா: மிதக்கும் குடியிருப்புகள்!

உலக மசாலா: மிதக்கும் குடியிருப்புகள்!
Updated on
1 min read

டென்மார்க் கட்டுமான நிறுவனம் ஒன்று சூழலுக்கு உகந்த, விலை குறைந்த குடியிருப்புகளை உருவாக்கி வருகிறது. பெரும் நகரங்களில் வாடகை முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. வசதி இல்லாதவர்களுக்காகவே புதுமையான மிதக்கும் கண்டெய்னர் குடியிருப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். துறைமுகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மாணவர்களே அதிகம் தங்கியிருக்கின்றனர். ‘படிப்புச் செலவை விட தங்கும் செலவு இங்கே அதிகம். கண்டெய்னர் குடியிருப்பில் தங்கிய பிறகு, கணிசமாகச் சேமிக்க முடிகிறது. அறைகள் நவீனமாகவும் அனைத்து வசதிகளுடனும் இருக்கின்றன.

ஒரு கண்டெய்னரில் 12 பேர் தங்கலாம்’ என்கிறார் மாணவர் ஸ்டீவ். ‘என் மகன் தங்கிப் படிப்பதற்காக நல்ல இடத்தைத் தேடினோம். எங்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி கிடைக்கவில்லை. அப்போது உருவானதுதான் கண்டெய்னர் குடியிருப்பு. நாங்கள் நினைத்தது போலவே விலை குறைவாகவும் வசதியாகவும் அமைந்துவிட்டது. குடியிருப்புகளின் தேவை அதிகம் இருப்பதை அறிந்தவுடன், இதையே தொழிலாக மாற்றிக்கொண்டோம். டென்மார்க் முழுவதும் 20 இடங்களில் 240 குடியிருப்புகளை உருவாக்கி வருகிறோம். ஸ்வீடனில் 288 குடியிருப்புகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் எங்கள் கண்டெய்னர் குடியிருப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது’ என்கிறார் அர்பன் ரிகர் நிறுவனர் கிம் லோட்ரப்.

பர்ஸை பதம் பார்க்காத மிதக்கும் குடியிருப்புகள்!

கராகல், அபிசினியன் பூனைகளை இணைத்து கராகட் என்ற கலப்பின பூனை உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிக அரிதான, விலை மதிப்புமிக்க பூனை இது. ஒரு பூனையின் விலை 16 லட்சம் ரூபாய். 30 பூனைகளே உலகில் இருக்கின்றன. காட்டுக் கராகல் பூனைகள் மிகவும் அழகானவை. இவற்றின் காதுகள் முக்கோண வடிவில் அமைந்திருக்கும். பண்டைய எகிப்து நாட்டில் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. கராகல் பூனையின் சின்னங்களை, பாரோக்களின் உடலோடு சேர்த்துப் புதைத்தனர். சீனாவில் மன்னர்கள் கராகல் பூனைகளைச் சிறப்புப் பரிசாக விருந்தினர்களுக்குக் கொடுத்தனர். இன்றும்கூட கராகல் பூனைகளைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்க்ள்.

பல நூறு ஆண்டுகளாக மனிதர்களுடன் வசித்தாலும் சில நேரங்களில் காட்டுக் கராகல் பூனைகள் மூர்க்கத்தனமாக நடந்துவிடுகின்றன. அதற்காகவே 2007-ம் ஆண்டு இரண்டு இனங்களை இணைத்து, கராகட் கலப்பு இனப் பூனைகளை உருவாக்கினார்கள். 20 அங்குல உயரமும் 15 கிலோ எடையுமாக இருந்தன. மியாவ் என்று கத்துவதற்குப் பதில், நீண்ட நகங்களால் சத்தம் எழுப்பின. கராகட் பூனைகள் உருவாக்கம் அளவுக்கு அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. கருவுறுதலுக்கு நீண்டகாலம் ஆகிறது. அப்படியே குட்டிகள் பிறந்தாலும் மிக அரிதாகத்தான் பிழைக்கின்றன. இதனால்தான் பூனைகளின் விலை அதிகமாகிறது. ரஷ்யாவில் இந்தப் பூனைகளை வாங்குவதற்கு ஆர்வத்துடன் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

ஒரு செல்லப் பிராணிக்கு இவ்வளவு மெனக்கெடணுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in