Published : 19 Jul 2014 09:44 AM
Last Updated : 19 Jul 2014 09:44 AM

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்: அமெரிக்க அதிபர் ஒபாமா

மலேசிய விமானம் எம்.எச்.17 உக்ரைன் கிழக்கு பகுதியில் வியாழக்கிழமையன்று ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டது. இந்நிலையில், மலேசிய விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

கிழக்கு உக்ரைன் தீவிரவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத கோபத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றும் உக்ரைன் பிராந்திய பிரச்சினையில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் இந்த கருத்துகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ஐ.நா.வுக்கான தூதர் சமந்தா பவர் இதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் எடுத்துரைத்துள்ளார்.

எஸ்ஏ-11 ரக ஏவுகணை மூலம் தாக்குதல்!

ரஷ்ய தயாரிப்பு ஏவுகணை எஸ்ஏ-11 ரக ஏவுகணை மூலம்தான் விமானம் வீழ்த்தப்பட்டிருக்க வேண்டுமென்று அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகைய ஏவுகணையை கிளர்ச்சியாளர்களால் தனியாக இயக்கிட முடியாது. இதற்கு தொழில்நுட்ப ஆற்றல் கொண்டவர்களின் உதவி தேவை. எனவே, ஏவுகணையை இயக்க ரஷ்ய படைகள் நிச்சயம் உதவியிருக்க வேண்டும் என அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், உக்ரைன் போக்குவரத்து விமானம், ஹெலிகாப்டர், போர் விமானம் ஆகியவற்றை வீழ்த்தியதாக கிளிர்ச்சியாளர்கள் அறிவித்தததையும் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஒபாமா கூறுகையில்: "கிளர்ச்சியாளர்களுக்கு, ரஷ்யாவில் இருந்தே ஆயுதங்கள், பயிற்சி, கனரக ஆயுதங்கள், விமானங்களை வீழ்த்தும் போர் உகரணங்கள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன என்பது நன்றாக தெரிகிறது. எனவே இவ்விவகாரத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உதவ வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

விமானம் வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும், அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ-யும் உக்ரைனுக்கு விசாரணை அதிகாரிகளை அனுப்ப இருப்பதாக கூறியுள்ளது.

அதேவேளையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், ரஷ்யா, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் என அனைத்து தரப்பினரும் தற்காலிக போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் சம்பவ இடத்தை விசாரணைக் குழுவினர் சென்றடைய முடியும். தடயங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது என ஒபாமா கூறியுள்ளார்.

புடினால் சாத்தியமாகும்:

உக்ரைன் - ரஷ்யா எல்லையில் கனரக ஆயுதங்களை கொண்டு செல்வதை நிறுத்தும் முடிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எடுக்க வேண்டும். அப்போதுதான் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைனுக்கும் இடையே சமாதான பேச்சு ஏற்பட வழிவகை அமையும் என்றும் அதிபர் ஒபாமா யோசனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சர்ச்சைக்கு தீர்வு காண ரஷ்ய அதிபர் தனது முழு அதிகாரத்தையும் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x