உலக மசாலா: அகதிகள் நுழைவதைத்  தடுக்கும் சுவர்

உலக மசாலா: அகதிகள் நுழைவதைத் தடுக்கும் சுவர்

Published on

ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மன் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 160 அகதி குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்தச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அகதிகள் குடியிருப்புகள் இருக்கின்றன. அகதிகள் வந்த பிறகு இந்தப் பகுதியில் வீட்டின் மதிப்பு மிகவும் சரிந்துவிட்டது. அகதிகளின் கூச்சலால் இங்கு குடியிருக்க பலரும் மறுக்கிறார்கள். அகதிகளை அப்புறப்படுத்தச் சொல்லவில்லை. எங்கள் வசதிக்காக ஒரு சுவரை எழுப்பிக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கிவிட்டது. உடனே 4 மீட்டர் உயரத்தில் மிக நீளமான சுவர் ஒன்றைக் கட்டிவிட்டனர். பெர்லின் சுவரின் உயரமே 3.6 மீட்டர்தான். மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஜெர்மன் மக்கள் இதை ஆதரிக்கவில்லை. இது பயமளிக்கக்கூடியதாகவும் முட்டாள்தனமாகவும் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பவேரியா பகுதியில் உள்ளவர்களில் ஐந்தில் நான்கு பேர் முஸ்லிம், அகதிகள் குறித்து எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அகதிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

சுவரின் வலி தெரிந்தவர்களே இப்படி ஒரு சுவரைக் கட்டலாமா?

சீனாவின் வென்ஜோவ் பகுதியில் உள்ள மிஸ்டர் ஹாட் பாட் உணவகத்துக்கு மகளையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு சாப்பிட வந்தார் லின். தண்ணீர் ஊற்றிய பிரச்சினையில் லின்னுக்கும் உணவக ஊழியர் ஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார் லின். உணவக மேலாளர்களில் ஒருவர் பார்த்துவிட்டார். சீனாவில் சமூக வலைதளங்களில் எழுதப்படும் விமர்சனங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் ஜுவை அழைத்து விஷயத்தைச் சொன்னார் மேலாளர். லின்னிடம் விமர்சனத்தை எடுத்துவிடும்படி கேட்டார் ஜு. லின் மறுத்தார். கோபத்துடன் சென்ற ஜு, கொதிக்கும் சூப்பை லின் மீது கொட்டினார். தலை, முகம், கழுத்து, கால் என்று லின்னின் உடல் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் லின். ஜு கைது செய்யப்பட்டார். வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் ஜு. விசாரணையின் முடிவில் 22 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. வேலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உணவகத்துக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. லின்னின் பிளாஸ்டிக் சர்ஜரி செலவுகளுக்காக 23 லட்சம் ரூபாயை உணவகம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சே, ஒரு நொடி கோபம் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். நியூயார்க் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பள்ளி மாணவர்களின் தேர்தல் கணிப்பு, கடந்த 48 ஆண்டுகளில் முதல்முறையாகத் தவறிவிட்டது.

ம்... அடித்த காற்றில் அம்மியே பறந்து போய்விட்டதாம்...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in