

பாலி: இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று மாநாட்டின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தலைவர்களுடன் பாலி தீவில் உள்ள மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர்.
ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது.
ஜி-20 மாநாட்டின் அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசி வருகிறார். குறிப்பாக, இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். உலக வங்கி தலைவ டேவிட் மால்பாஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்தார்.
இன்று உலகத் தலைவர்கள், பாலி தீவில் உள்ள டமன் ஹுட்டான் ராயன் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளைப் பார்வையிட்டனர். பின்னர் அங்கு மரம் நட்டனர்.