

சீனாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜி யாங் பகுதி மக்கள் பாஸ்போர்ட்டை ஓப்படைக்க அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஜின்ஜி யாங்கில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்ஜிஸ்தான், ரஷ்யா, மங்கோலியா ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
இப்பகுதி மக்கள் தனிநாடு கோரி மிக நீண்டகாலமாக போராடி வருகின்றனர். கடந்த 1990-ல் சோவியத் யூனியன் உடைந்து பல்வேறு நாடுகள் உருவானபோது ஜின்ஜியாங் பகுதி மக்களும் புரட்சியில் ஈடுபட்டனர். அந்தப் புரட்சியை சீன ராணுவம் ஒடுக்கியது.
இன்றளவும் ஜின்ஜியாங் பகுதியில் ராணுவத்தின் அத்துமீறல்கள், அடக்குமுறை நடவடிக்கைகள் நீடிப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தப் பின்னணியில் ஜின்ஜி யாங் பகுதி மக்கள் அனைவரும் தங்களின் பாஸ்போர்டை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அந்த நாட்டு அரசு உத்தர விட்டுள்ளது.
புதிதாக பாஸ்போர்ட் தேவைப்படுவோர் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்காத வர்கள் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று சீன அரசு எச்சரித்துள்ளது.