Last Updated : 28 Nov, 2016 03:54 PM

 

Published : 28 Nov 2016 03:54 PM
Last Updated : 28 Nov 2016 03:54 PM

ட்ரம்ப் விசா நடவடிக்கை அச்சம்: அமெரிக்காவில் ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்தில் ஐடி நிறுவனங்கள்

ட்ரம்ப் ஆட்சியில் இந்திய ஐடி நிறுவனங்களை வாழவைக்கும் எச்1பி விசா நடவடிக்கைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் வரும் என்ற அச்சத்தினால் அமெரிக்காவில் கல்லூரி வளாகங்களில் நேர்காணல்கள் நடத்தி ஊழியர்கள் தேர்வில் இந்திய ஐடி நிறுவனங்கள் ஈடுபடவிருக்கின்றன.

ட்ரம்ப் தனது எச்1பி விசா நடவடிக்கைக்காக அதன் நீண்ட கால விமர்சகரான அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸை தன் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளதால் இந்தியாவின் 150 பில்லியன் டாலர்கள் ஐடி சேவைகள் துறை அங்கு கல்லூரி வளாகங்களில் புதிய ஊழியர்களுக்கான நேர்காணல்களில் ஈடுபடவுள்ளது.

டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் எச்1பி விசா ஊழியர்கள் மட்டும் 2005 முதல் 2014 வரை 86,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனங்களில் மிகப்பெரிய சந்தை அமெரிக்காதான்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. பிரவின் ராவ், கூறும்போது, “உலகம் முழுதுமே தங்கள் நாட்டு வேலைவாய்ப்பை உருவாக்கும், தக்கவைக்கும் தற்காப்பு அணுகுமுறைகள் அதிகரித்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக குடியேற்றத்தையும் திறன் அதிகமுள்ள தற்காலிகப் பணியாளர்கள் இங்கு வருவதையும் குழப்பிக் கொள்கிறார்கள். நாங்கள் தற்காலிகப் பணியாளர்கள்தான்” என்றார்.

சிலிகான்வாலியின் ஒட்டுமொத்த பணிச்சூழலில் இந்திய திறன் பணியாளர்களின் பங்களிப்பு அதிகம். இவர்களது மலிவான ஐடி, மென்பொருள் வேலைகளை அமெரிக்க வர்த்தகம் நம்பியுள்ள நிலையில் இதில் மாற்றங்கள் வருவது செலவுகளை அதிகரிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.

இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பும் மென்பொருள் பொறியாளர்கள் எண்ணிக்கை குறையும் என்றும் அமெரிக்காவிலேயே புதிய பணியாளர்களை கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, நிறுவனங்களும் அதற்கான செயல்திட்டங்களைத் தீட்டியதாக தெரிகிறது.

“அமெரிக்காவில் உள்நாட்டுப் பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக் கழகங்களிலிருந்து புதியவர்களைத் தேர்வு செய்வதையும் தொடங்க வேண்டும். அதாவது புதியவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து கொஞ்சம் கொஞ்சமாக பணியில் அமர்த்த வேண்டும், நிச்சயம் இதனால் செலவுகள் அதிகரிக்கும்” என்கிறார் இன்போசிஸ் சி.ஓ.ஓ.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்போசிஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் 500-700 பேரை தேர்ந்தெடுக்கின்றன இதில் 80% உள்ளூர்வாசிகளே.

ட்ரம்பின் வெற்றி, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற வாக்களித்தமை ஆகியவற்றினால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பெரிய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் வரை செலவினங்களை கடுமையாக குறைத்துள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சற்றே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனங்களை இந்திய ஐடி நிறுவனங்கள் வாங்கலாம். ஆனால் அங்கு ஏற்கெனவே இருக்கும் உள்நாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை மூலம் புதிய கட்டுப்பாடுகளிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மென்பொருள் சேவைகள் சுமார் 2 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன. ஐடி துறையின் வருவாயில் வட அமெரிக்காவின் பங்களிப்பு பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

“அங்கு நிறுவனங்களை வாங்குவதை அதிகரிக்க வேண்டும்” என்கிறார் இன்போசிஸ் சி.ஓ.ஓ. கடந்த 2 ஆண்டுகளில் இன்போசிஸ், அமெரிக்க நிறுவனங்களான நோவா கன்சல்டன்சி, காலிடஸ் டெக்னாலஜீஸ் ஆகியவற்றை வாங்கியுள்ளது.

இதே போல் விப்ரோ, டெக் மகீந்திரா ஆகிய ஐடி நிறுவனங்களும் அமெரிக்க நிறுவனங்கள் சிலவற்றை வாங்கியுள்ளன.

மேலும் ஊழியர்கள் எண்ணிக்கையை நம்பி இயங்கும் மென்பொருள் திட்டப்பணிகளை விடவும் உயர்தொழில் நுட்ப சேவைகளான ஆட்டோமேஷன், ஆர்டிபீசியல் இண்டெலிஜென்ஸ் ஆகியவை நோக்கி ஐடி நிறுவனங்கள் திரும்பியுள்ளன. அதாவது நேரடி பணியாளர்களைக் குறைக்கும் ஆட்டோமேஷன் பணித்திட்டங்கள் இனி அதிகரிக்கும் என்று தெரிகிறது. எனவே ட்ரம்ப் நடவடிக்கை உக்கிரம் பெற்றால் அது ஐடி நிறுவனங்களை விட ஊழியர்களை அதிகம் பாதிக்கும் என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x