Published : 14 Nov 2022 02:32 PM
Last Updated : 14 Nov 2022 02:32 PM

18 ஆண்டுகள் விமான நிலையத்தில் வாழ்வு.. டெர்மினல் படத்திற்கு காரணமான மெஹ்ரான் உயிரிழப்பு

மெஹ்ரான் கரீமி நஸ்செரி | கோப்புப் படம்

பாரிஸ்: பிரான்ஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக தங்கி இருந்த ஈரானின் மெஹ்ரான் கரீமி நஸ்செரி உயிரிழந்தார்.

ஈரானை சேர்ந்தவர் மெஹ்ரான் கரீமி நஸ்செரி அங்கு நடந்த அரசியல் புரட்சி காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறி 1988 ஆம் ஆண்டு அரசியல் அகதியாக பிரிட்டனில் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார்.

மெஹ்ரானி தாயார் ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் அகதிக்கான உரிய ஆவணம் இல்லாததால் 1988-ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள ஆகஸ்டில் பாரீஸ் நகரில், சார்லஸ் டி கால்லே விமான நிலையத்தில் மெஹ்ரான் தங்கத் தொடங்கினார். தான் ஒரு நாடற்றவர் என்பதை அறிவித்து அங்கிருந்த டெர்மினல் பகுதியில் தனது பெட்டி, படுக்கைகளுடன் மெஹ்ரான் தங்கத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு முதல் 2006 வரை மெஹ்ரான் கரீமி நஸ்செரி அங்குதான் தங்கி இருந்தார்.

தனது ஒவ்வொரு நாளையும் புத்தக வாசிப்பிலும், எழுதுவதிலும் மெஹ்ரான் செலவிட்டு வந்தார். இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சில காலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். எனினும் சில மாதங்களாக மெஹ்ரான் சார்லஸ் டி கால்லே டெர்மினல் 2f பகுதியில் மீண்டும் தங்க தொடங்கினார். இந்த நிலையில் தனது 77 வயதில் மாரடைப்புக் காரணமாக மெஹ்ரான் விமான நிலையத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்துத்தான் டெர்மினல் படத்தை இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் மெஹ்ரான் கரீமி நஸ்செரி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்ஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x