

அதிபர் பாக் குன் ஹே தலைமையிலான தென் கொரிய அரசு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் வரலாற்றுப் பாடப் புத்தகத்துக்கு எழுந்திருக்கும் பரவலான எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் வகையில், சியோல் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தை வெளியிட கல்வி அமைச் சகம் திட்டமிருந்த தேதிக்குச் சில நாட்கள் முன்ன தாக, இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்கும் நீதி மன்றம், புத்தகத்தை எழுதிய ஆசிரியர்களின் விவரத்தையும், எந்த அடிப்படையில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது என்ற விவரத்தையும் வெளியிடுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கெனவே, அதிபரின் தோழியான சோய் சூன் இல் நிழல் ஆட்சி நடத்துவதாகப் பரவலாகப் போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், அரசின் வரலாற்றுப் பாடப்புத்தகத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு, கல்வி அமைச்சகத்தை யோசிக்க வைத்திருப்பதாகவே தெரிகிறது. மார்ச் 2017-ல் முதல் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும், இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்த அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால், பழைய புத்தகங்களைப் பயன்படுத்துவதா, புதிய புத்தகங்களைப் பயன்படுத்துவதா எனும் முடிவை அந்தந்தப் பள்ளிகளே எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கக் கூடும் என்று சமீபத்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் போராட்டத்துக்குப் பின்னர் தென் கொரியா அடைந்திருக்கும் ஜனநாயகத்தை அவமதிக்கும் விதத்தில் அரசின் புதிய பாடப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை அதிபர் பாக் தான் இன்னும் உணரவில்லை. இன்றைய காலகட்டத்தில், பள்ளிகளில் கற்பிக்கப்படுபவை எல்லாம் உண்மை என்று அப்படியே நம்பிவிடாத அளவுக்குக் கொரிய மாணவர்கள் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாற்றைத் திரித்து எழுதுவதன் மூலம், அடுத்த தலைமுறையிடம் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என்று அதிபர் பாக் கருதினால், அது அதீத கற்பனையாகத்தான் இருக்கும். இதுபோன்ற முயற்சிகள் அவரது ஆட்சிக்கு எதிரான கோபத்தைத்தான் வளர்த்தெடுக்கும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 20% பேர்தான் இந்தப் புத்தகத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தையே அதிபர் பாக் திரும்பப் பெற வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மக்களின் கருத்தை அலட்சியம் செய்யும் போக்கு கொண்ட அவர், அப்படிச் செய்துவிடப்போவதில்லை.
புதிய புத்தகங்களில் நியாயமான முறையில் வரலாறு பதிவுசெய்யப்பட்டிருக்கும் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை இந்தத் திட்டத்தை அமல்படுத்து வதைக் கல்வி அமைச்சர் லீ ஜூன் சிக் நிறுத்திவைக்க வேண்டும். அதிபர் பாக்கின் தந்தையும் சர்வாதிகாரியு மான பாக் சங் - ஹீயின் ஆட்சியைப் போன்ற இருண்ட காலங்களைப் போற்றிப் புகழக் கூடிய, ஒரு தலைப்பட்சமான வரலாற்றை இந்தப் புத்தகங்கள் பேசி யிருந்தால், பள்ளிகள் அவற்றை நிராகரிக்க வேண்டும். புத்தகங்கள் வெளியிடப்பட்டாலும், அவற்றை ஏற்பதா வேண்டாமா என்பதைப் பள்ளிகள் முடிவு செய்ய கல்வி அமைச்சகம் அனுமதிக்க வேண்டும்!
தமிழில்:வெ.சந்திரமோகன்