கோப்புப் படம்
கோப்புப் படம்

போலி கணக்குகளுக்கும் ப்ளூ டிக்: அதிருப்தியில் ட்விட்டர் பயனர்கள்

Published on

கலிஃபோர்னியா: போலிச் செய்திகளைப் பரப்புவோரும் ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதை பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிகாரபூர்வ பக்கங்கள் என்பதற்கான அடையாளமாக முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு வழிமுறைகள் சற்று கடினமாக இருந்தது. பத்திரிகையாளர்களும், செய்தி நிறுவனங்களும், பிரபலங்களும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் ப்ளூ டிக் பெற்று வந்தனர். இந்த நிலையில், எலான் மஸ்க் வகுத்துள்ள புதிய விதிமுறையால் பொய்ச் செய்திகளை பரப்பும் பல போலிக் கணக்குகளும் ப்ளூ டிக் பெற்று வருகின்றன. இந்த முறையினால் போலிச் செய்திகள் அதிகம் பகிரப்படும் என்று ட்விட்டர் பயனாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சமீபத்தில், ‘பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதில் நடக்கும் தவறுகளை பயனாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதனிடையே, ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு மாதாந்திர கட்டணமாக 8 டாலர் வழங்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு விமர்சனங்கள் இருந்தாலும் எலான் மஸ்க்கின் அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in