இராக், சிரியா பகுதிகளை இணைத்து தனி நாடு: கிளர்ச்சிப் படை பகிரங்க அறிவிப்பு

இராக், சிரியா பகுதிகளை இணைத்து தனி நாடு: கிளர்ச்சிப் படை பகிரங்க அறிவிப்பு
Updated on
2 min read

இராக், சிரியா நாடுகளில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை தனி நாடாக அறிவித்துள்ளது. சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் என்ற கிளர்ச்சிப் படை (ஐ.எஸ்.ஐ.எஸ்.) சிரியா, இராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது.

இரு நாடுகளிலும் பெரும்பான்மை பகுதிகள் அந்தப் படையின் வசம் உள்ளன. இந்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து இஸ்லாமிய அரசு (கிலாஃபத்) உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கிலாஃபத் என்பது இஸ்லாமிய மதரீதியான அரசாகும். அதன் தலைவராக முஸ்லிம் மதத் தலைவர் இருப்பார். துருக்கியைச் சேர்ந்த ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கிலாஃபத் அரசாட்சி அழிந்தது. இந்நிலையில் இராக், சிரியா பகுதிகளை ஒன்றிணைத்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கிலாஃபத் அரசாட்சியை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை உருவாக்கியுள்ளது.

புதிய அரசின் தலைவராக ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இனிமேல் கலீபா இப்ராஹிம் என்ற பெயரில் அழைக்கப்படுவார் என்றும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட் இனிமேல் “இஸ்லாமிக் ஸ்டேட்” என அழைக்கப்படும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்துள்ளது.

புதிய அரசின் (கிலாஃபத்) எல்லை வடசிரியாவின் அலெப்போ நகரில் இருந்து கிழக்கு இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரை பரவியிருக்கும். உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் தங்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கிளர்ச்சிப் படை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திக்ரித்தில் கடும் சண்டை

இராக்கில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே தற்போது கடும் சண்டை நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித்தை கடந்த ஜூன் 11-ம் தேதி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராக் அரசுப் படை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெறுகிறது.

இதனிடையே இராக் ராணுவத்தின் விமானப் படையை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து 25 சுகோய் ரக போர் விமானங்களை வாங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக சில சுகோய் போர் விமானங்கள் விமானப் படையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

உணவு தட்டுப்பாடு

இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது ரமலான் மாதம் என்பதால் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். போரினால் கடும் உணவு தட்டுப்பாடு நிலவுவதால் மிகக் குறைந்த அளவே முகாம்களுக்கு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான முகாம்களில் உணவுப் பொட்டலங்களை பெற குழந்தைகள் முதல் பெரியோர் வரை அலைமோதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in