

சிரியாவில் கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள அலிப்போ நகரின் பெரும்பகுதியை அந்த நாட்டு அரசுப் படை கைப்பற்றியுள்ளது. அந்த நகரில் இருதரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருப்பதால் ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
சிரியாவில் பலமுனை உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியா அதிபர் ஆசாத் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
அதிபர் ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு கிளர்ச்சிப் படைகளும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அந்த கிளர்ச்சிப் படைகள் அலிப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன.
அரசுப்படை முன்னேறுகிறது
எனவே அலிப்போ நகரை குறிவைத்து அதிபர் ஆசாத் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. நகரின் கிழக்குப் பகுதியை அரசுப் படைகள் நேற்று முன்தினம் கைப்பற்றி தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறுவதால் நகர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் குர்து படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.