

சீனாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் நேற்று நேரிட்ட விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் தென்கிழக்கில் உள்ள ஜியாங்சி மாகாணம், ஃபெங்செங் நகரில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்குள்ள குளிரூட்டும் கோபுரத்தைச் சுற்றிலும் அமைப் பட்டிருந்த நடைமேடை நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின்போது, ஏராளமான தொழிலாளர்கள் நடைமேடையில் பணியில் ஈடுபட் டிருந்தனர். இவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர்.
இதையடுத்து 200-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. இதில் 67 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இடிபாடுகளை அகற்றும் பணி நீடித்து வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ் வதால் பாதுகாப்பு விதிகளைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜின் நகரில் கடந்த ஆண்டு இரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 173 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபோல் கடந்த 2014-ல் கிழக்கு சீனாவில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 75 பேர் இறந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.