Published : 05 Nov 2022 07:22 AM
Last Updated : 05 Nov 2022 07:22 AM
நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா பேசியதாவது:
ஐ.நா. அமைதிப் படை தற்போது 12 நாடுகளில் அமைதி பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சார்பில் சுமார் 5,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 9 நாடுகளில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டி வருகின்றனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஓரணியில் திரளவேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து கைகோத்து செயல்பட வேண்டும். தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களை முழுமையாக முடக்க வேண்டும். சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவும் அடைக்கலமும் அளிக்கின்றன. அந்த நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாடுகள் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் சஜித் மிர்ரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்தது.
இதை கருத்தில் கொண்டு தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான், சீனா மீது ஐ.நா. சபை மற்றும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாமல் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT