Published : 04 Nov 2022 08:43 PM
Last Updated : 04 Nov 2022 08:43 PM

கெர்சன் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்

புதின் | கோப்புப் படம்

மாஸ்கோ(ரஷ்யா): உக்ரைனின் கெர்சன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பு நடத்தினர்.

இந்த நிலையில் புதின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிச்சயமாக கெர்சனில் வசிப்பவர்கள் (பொதுமக்கள்) அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும். இது போர் நடக்கும் ஆபத்தான பகுதி. பொதுமக்கள் இதில் பாதிக்கப்படக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெர்சன் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா கைபற்றியது. இதனைத் தொடர்ந்து அங்கு தங்கள் நாட்டு அதிகாரிகளை ரஷ்யா நியமித்து வருகிறது. இந்த நிலையில் கெர்சனை மீட்க உக்ரைன் பாதுகாப்புப் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இதையடுத்தே, பொதுமக்களை வெளியேறுமாறு புதின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேட்டோவில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா செய்த போர் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x